வெள்ளி, ஜூன் 27, 2014

பருவம் முளைத்த காதல்..


பனித்துளி போல் ஒரு காதல்
பருவம் என் மேல் 
பட்டுத் தெறித்த போது
படர்ந்தது என்னை - அது ஒரு 
பக்குவமடையாத காதல் 

பாடசாலை நாட்கள்
காதல் என்னை 
நகர விடாமல் செய்த 
நாட்கள்

நீ என்னை 
கைது செய்து 
கட்டிப் போட்டிருந்த நாட்கள்..

எப்போதும் கூடவே இருக்க
தப்பாது போகும் வகுப்புக்கள்..

வகுப்பு முடிந்து 
வந்து கதைக்கக் கூட
வரையறையின்றி கதைகள் 
வசமிருந்தன அப்போது..

நீ வரும் வழி பார்த்து 
நீடித்திருந்த பாதைகள்
நீண்ட நேரம் ஒன்றாய் நடக்க
நீண்ட பாதை பார்த்து நடந்த பொழுதுகள்

மழையில் நனையவென்றே 
மறைத்து வைக்கும் குடை..

பாடவேளைகளில் நீ காட்டும் 
பாவனைகளும் பார்வைகளும் 
பசுமையாக இன்னும்

அடிக்கடி தழுவும் பார்வையில்
நழுவிப் போனது நாணம்
நகர்ந்து போனது வெட்கம்

அப்போதெல்லாம் 
நீ - இன்னொரு நான்
நான் - இன்னொரு நீ..

நான்
நீ 
நாம் காதல்
என்று 
வரையறுத்த ஒரு வட்டம்
அவ்வட்டம் விட்டு 
வந்து விட்டேனா..?
அங்கே நானும் இல்லை..
நீயும் இல்லை
நினைவுகள் மட்டும் நிரந்தரமாய்..

தொடர்பு அறுந்தது
தொங்கலாய் ஒதுங்கிக் கொண்டன 
தொடர்ந்து வந்த நினைவுகள் 

பள்ளியுடன் முற்றுப் பெற்றது 
பால்ய காலத்தில் 
பருவம் முளைத்த காதல்

சிறகு முளைத்த காலத்தில் 
சிறகு கட்டிப் பறந்தது - இன்று
சிறகுகளைக் கழற்றி விட்டு
சிதறிப் போனது - என் 
சிறு வயதுக் காதல்

நாமும் வாழ்க்கைப் பட்டோம் 
நீ உன் மனைவிக்கும் 
நான் என் கணவனுக்கும் 

முழுமை பெறாத காதல் தான்
ஆனால் 
முதல் காதல் அது..

காதல் அற்றுப் போனாலும் 
காலம் முற்றுப் போனாலும் 
கடந்து போகாது நினைவுகள் 
காரணம் அது முதல் காதல் - என் 
பருவம் முளைத்த காதல்..

-இன்சிராஹ் இக்பால்-

   



செவ்வாய், செப்டம்பர் 25, 2012

காகிதப் பூக்கள் நாம்...!

காகிதப் பூக்கள் நாம்...!

கலைந்த பறவைகளின் காதல் இது..!
சில காதல் பூக்கள்
கல்லறையில் விழுவதற்கே பூக்கின்றன..

இவை கல்லறைப் பூக்கள் தான்..
ஆனாலும் காகிதப் பூக்கள்..
வாடிப் போகவும் முடியாமல்
கூடிச் சேரவும் முடியாமல்
காலத்தின் கயிறை
காலனின் கயிறாய்
கழுத்தில் ஏந்திய காதலிது..!
சில சந்திப்புக்கள்
காதலில் சங்கமமாகின்றன..
சில சந்திப்புக்கள்
காதலுக்கு கருவூட்டுகின்றன..
காதல்கள் கருவறையில் பிறப்பதுமில்லை..
கல்லறைகள் காதலைப் பிரிப்பதுமில்லை...
காதலின் கட்டளைக்கு அடிபணிந்தோம் நாம்..!
ஆனால்
காலத்தின் கட்டளையோ வேறாக இருக்கிறது..
காதல்கள்
கல்யாணத்தில் முடிவதை விட
கண்ணீரிலே முடிவதே அதிகம்..
காதலின் அகராதியில் நாமும்
காகிதப் பூக்கள் தான்..
ஒரு நாளும் பூஜைக்கு போகாது...!!



-இன்ஷிராஹ் இக்பால்-

எனது குரல் கேட்கவில்லையா..???


எனது குரல் கேட்கவில்லையா..???
என்னைச் சுற்றியுள்ள
சனம் சொல்கிறது
நீ இல்லை என்று - ஆனால்
என் மனம் சொல்கிறது
நீ இன்னும் இருக்கிறாய் என்று..

என் மனசின் குரல்
உனக்கு கேட்கவில்லையா.?
என் அழுகுரல்
உன்னை அழைக்கவில்லையா..?
ஆனால் உன் குரல் எனக்கு கேட்கிறது..
உனது பேச்சு
உனது சிரிப்பு
உனது பாடல்
உனது குரல்
எனக்கு கேட்கிறது..
நிச்சயமாய் நீ தான்- அனால்
அது நிஜமில்லையா..?
நினைவா அது..?

நாட்கள் நகரத் தான் செய்கின்றன
நினைவுகள் மட்டும் நகராமல்
நிரந்தரமாய் உன்னையே சுற்றுகின்றன..

கண்களை மூடினால்
கனவு வந்து கலாய்க்கிறது என்னை
கனவில் நீ..
என்னுடன் கதைக்கின்றாய்
சிரிக்கின்றாய்
முறைக்கின்றாய்...!
கண்விழித்து தேடுகின்றேன்..
கண்ணீரால் நனைந்த தலையணையையும்
என்னைக் கட்டிக் கொண்ட
தனிமையையும் தான்
கண்டு கொள்கிறேன் நான்..

வாயை மூடி அழுகின்றேன்
அந்தக் குரல் உனக்கு கேட்கவில்லையா
கேட்டிருக்காது
கேட்டிருக்காது..
கேட்கப் போவதில்லை..
உன்னைப் பொறுத்த வரையில்
நான் ஒரு ஊமை..
என்னைப் பொறுத்தவரை
நீ ஒரு செவிடு..
ஏனென்றால்
எனது குரல் உனக்கு கேட்பதில்லை..
நீ நினைக்கிறாய்
நான் பேசுவதில்லை என்று..

இப்போது கூட எனது குரல்
கேட்கவில்லையா..??

வெள்ளி, நவம்பர் 25, 2011

பூ முகத்தில் புன்னகை..!


 மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். "இந்த சந்தோசமான செய்தியை அம்மா வந்தவுடனே அவகிட்ட சொல்லணும்.." என்று எண்ணிய வண்ணம்  தன் விழிகளை வீதியை நோக்கி ஓட்டினான்.

           ஆர்த்தி, சூர்யாவின் ஒரே பிள்ளை தான் ஆகாஷ். காரியாலயமொன்றில் கடமை புரியும் ஆர்த்தி காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் நான்கு மணிக்குத் தான் வீடு திரும்புவாள். ஆர்த்தி தான் இப்படி என்றால், சூர்யா காலையில் ஆகாஷ் உறங்கிக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் புறப்படுவான். இரவு அவன் வீடு திரும்பும் போது ஆகாஷ் உறங்கிக் கொண்டிருப்பான். தினமும் இதே பல்லவி தான் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தாய் தந்தை இருவரும் தொழில் புரிய வெளியே செல்லும் அவ்வீட்டிலே முதலாம் தரத்திலே பயிலும் ஆகாஷ் தனியனாக உலவிக் கொண்டிருப்பான்.

          தூரத்திலே வந்து கொண்டிருந்த தனது தாயை அடையாளம் கண்டு கொண்ட ஆகாஷ் அவளை நோக்கி ஓடினான்.

         "அம்மா... அம்மா.. நான் இன்டைக்கு உங்ககிட்ட ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல வேணுமம்மா.." என்று ஆனந்தக் கூத்தாடிக் கொண்டே கூறினான்.

    "என்ன.. ஆபிசிலிருந்து வரும் போதே உன் தொணதொணப்ப ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்டைக்கு சரியான டயர்ட் ஆக இருக்கு.. நான் சாப்பிட்டு முடிஞ்சதும் சொல்றதெல்லாம் சொல்லித் தொலை.." என்று எரிச்சலுடன் கூறினாள் ஆர்த்தி. அவள் இவ்வாறு கூறியதும் ஆகாஷின் அழகு முகம் ஒரு கணம் சுருங்கிப் போனாலும் பிறகு அம்மா தன் செய்தியைக் கேட்பாள் என்ற நம்பிக்கையுடன் அவள் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். 

          ஆர்த்தி ஒருவாறு உண்டு முடிந்ததும் ஆகாஷ் அவளிடம் சென்று, "அம்மா.. விஷயத்த சொல்லட்டா அம்மா.." என ஆவலோடு கேட்டான். "ஐயோ.. சனியன் வந்துட்டாயா.. நான் இப்ப எந்த விசயத்தையும் கேட்குற நிலைமையில் இல்லை.. கொஞ்சம் தூங்கி எழும்பிட்டு வாறன்.." என்று வெடுக்கெனக் கூறி விட்டு படுக்கையில் சாய்ந்தாள் ஆர்த்தி.. 

           "ஏன் அம்மா நான் சொல்ற எதையும் கேட்க மாட்டேங்குறாங்க.. சரி.. பாவம்.. அம்மாக்கு அசாத்திய இருக்கும் போல. தூங்கி எழும்பிட்டு கேட்பா தானே.. பாவம் நல்ல வியர்த்தும் இருக்கே.." என்று அவளருகே வந்து அவள் விளிக்கும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான். 

           திடீரென விழித்துக் கொண்ட ஆர்த்தி, "ஐயோ.. எட்டு மணி ஆகிட்டுதா..? நாடகம் பார்க்கணுமே.." என்று பதறி அடித்துக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி ஓடினாள். 

          "அம்மா.. இதக் கொஞ்சம் கேளும்மா.." என்று அவளிடம் வந்து கெஞ்சும் தோரணையில் கேட்டான். "என்னடா.. ஒனக்கு நான் நாடகம் பார்க்குற நேரத்துலய இதெல்லாம் சொல்றதுக்கு ஞாபகம் வரும். போடா.. போ.. " என்று கத்தினால் ஆர்த்தி.. 

          "அம்மா.. நீ தானே சொன்னாய்.. தூங்கி முடிந்ததும் ஏன் கதையைக் கேட்பாய் என்று.. கேளும்மா.. சொல்றேன்.. இன்டைக்கு எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும்..." என்று ஆகாஷ் கூறிக் கொண்டே போக ஆர்த்திக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது. 

           "நீ ஒன்றும் சொல்லத் தேவையில்ல.. வீட்ல கெடந்து படிச்சாப் போதும்.. போ.. போ.. உள்ளே.." என்று கத்தினால் அவள். இவ்வாறு கத்தியும் உள்ளே போகாமல் அங்கேயே நின்று கொண்டு எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆகஷைக் கண்டதும் ஆர்த்தியின் கோபம் எல்லை கடந்தது. எழுந்து வந்து அவனை தாறு மாறாக அடித்தாள். "ஐயோ,.. அம்மா அடிக்காதிங்கம்மா.." என்று கதறி அழுது கொண்டு, புழு துடிப்பதைப் போல துடித்துக் கொண்டு தன் உள்ளறை நோக்கி ஓடினான். 

          உள்ளே வந்து கட்டிலில் சாய்ந்த அவனது நெஞ்சில் தாய் கையால் அடித்த அடிகளை விட, அவள் சொல்லால் அடித்தவற்றின் துயரமும் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கவலையுமே நிரம்பி வலிந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் சூடான கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அன்னையின் அடியாள் துவண்டு போன அவனுக்கு பக்கத்தில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. ஆகாஷ் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் அவனது கரடி பொம்மை. அதனைக் கண்டதும் ஆகாஷ் தன் கண்களில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் கண்ணீர் வெள்ளத்திற்கு அணைக்கட்டு போட்டு விட்டு தன் கரடி பொம்மையை வாரியெடுத்து அணைத்தான். 

           "ஹலோ. மை டியர் டெடி.. நான் என் கதைய உன்கிட்ட சொல்லட்டா.. நீயாவது மறுக்காம கேட்பாய் தானே.. எங்கட ஸ்கூல்ல இன்டைக்கு ஒரு பாட்டுப் போட்டி நடத்தினாங்க..athula எனக்குத் தான் முதல் பரிசு.. டீச்சர் எனக்கு ஒரு கலர்ப்பெட்டி தந்தாங்க.. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்திச்சி தெரியுமா..? அதத்தான் நான் ஆசையோட அம்மாக்கிட்ட சொல்லணும் என்டு ஓடி வந்தேன்.. அவ கேட்கல.. இனிமே எதாவது விசேசம் இருந்தா உன்கிட்டயே சொல்றேன்..." என்று தன் கரடி பொம்மையிடம் ஏதேதோ கூறிய வண்ணம் அதனை அனைத்துக் கொண்டு உறங்கத்தொடன்கினான். தாய் மடி தராத சுகத்தை அக்கரடியின் அரவணைப்பு கொடுத்ததாலோ என்னவோ தன்னை அறியாமல் உறங்கியும் விட்டான். 

           அடுத்த நாள் விடுமுறை தினம். ஆர்த்தி காலையிலே எழுந்து கருமமே கண்ணாயினாள். சூர்யா விடுமுறை என்றாலும் வீட்டிலே இருப்பதில்லை. அவனது விடுமுறை நாட்களெல்லாம் பெரும்பாலும் நண்பர்கள் வீட்டிலேயே கழியும். 

           ஆகாஷ் காலையிலே எழுந்து பொழுது போகாமல் வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் வீதியிலே விளையாடுவதைக் கண்ட அவன் தன் தாயிடம் ஓடோடிப் போய்.., 

           "அம்மா.. நான் இன்டைக்கு மட்டும் என் பிரெண்ட்ஸ் மாரோட போய் விளையாடிட்டு வரவா அம்மா.." என்று தனக்கே உரித்தான மழலை மொழியில் கேட்டான். 

           உடனே ஆர்த்தி,"வெளியில போய் விளையாடனுமா..? இங்க உள்ளே உனக்கு என்ன குறை..? வெளியில எல்லாம் விளையாடத் தேவையில்ல.. உள்ளே போய் அந்தக் கம்ப்யூடர் கேம்ஸ் விளயாடினப் போதும்.." என்று அப்பிஞ்சு நெஞ்சை முள்ளால் தைப்பது போலக் கூறினாள். 

          "இல்ல அம்மா.. எங்கட டீச்சர் சொல்லியிருக்காங்க.. வெளியில போய் ஓடியாடி வெளயாடினத் தான் எங்கட உடம்பு நோயில்லாம இருக்குமாம்.." என்று எப்படியாவது தபக்கு நண்பர்களுடன் விளையாட அனுமதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கேட்டான். 

          "என்ன நீ எங்களுக்கே சொல்லித்தர வாரியா..? உன்ன விட எங்களுக்கு நல்ல தெரியும்.. பெரிய ஆள் மாதிரி பேச வந்துட்டான் அதிகப் பிரசங்கித் தனமா.. நீ ஒண்டும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்ல.. போ.. போய் உள்ளே கிட.." என்று ஆகாஷிடம் எரிந்து விழுந்தாள்.

           தன் உணர்வுகளுக்கு மதிப்பளியாத கருத்துக்களுக்கு இடம் கொடாத, தன்னை, தன் ஆசைகளைப் புரிந்து கொல்லாத தாயின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், அவனால் என்ன தான் செய்து விட முடியும் வாய் பொத்தி முகத்தை மூடி அழுவதைத் தவிர.  


           தன்னறை ஜன்னல் வழியே தன் நண்பர்கள் விளையாடுவதையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். தனக்குத் துணையாக இருக்கும் கரடி பொம்மைக்குக் கூட தன்னுடன் விளையாட உயிரில்லையே என்று நினைக்கும் போது அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. நெஞ்சம் விம்மி வெடிக்கப் பார்த்தது. தன் கவலைகளை எல்லாம் தன் சின்ன இதயத்திற்குள் பூட்டிக் கொண்டவனாக ஜன்னல் கம்பிகளைப் பற்றிய வண்ணம் வீதியில் விளையாடும் தன் நண்பர்களையே பெரும் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கையில் திடீரென அவனுக்கு ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம், அவனது ஆசிரியை அவனுக்கு வாங்கிக் கொடுத்த கலர்ப்பெட்டி நினைவுக்கு வந்தது.



           உடனே ஆகாஷ் தன் கலர்ப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு கலராக எடுத்து தன் அறைச் சுவரில் ஓவியம் வரையத் தொடங்கினான். அப்பிஞ்சு நெஞ்சன் தன் கவலைகளை சற்று நேரம் அடக்கி வைத்து விட்டு சுவரில் ஓவியம் வரித்து கொண்டிருந்தான். தன் என்னத்து ஏக்கங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அங்கும் இங்கும் கோடுகளை இழுத்து சித்திரத்தை தீட்டத் தொடங்கினான். 




          தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ஆர்த்தி இவனது செய்கையைக் கண்டால். உடனே அவளுக்கு  கோபம் தலைக்கு மேல் ஏறியது. உடனே ஒரு கம்பை எடுத்து வந்து ஆகாஷின் முதுகில் ஒரே போடாகப் போட்டாள். உடனே ஆகாஷ் பலி கொடுக்கவிருக்கும் ஆடு துடிப்பதைப் போல துடித்தான். "ஐயோ.. அம்மா.." என்று ஒப்பாரி வைத்து அழுதான்.


            "என்ன..? உனக்கு ஆயிரம் முறை சொன்னாலும் விளங்குதில்ல.. போன வாரம் தானே சுவருக்கு பெயின்ட் பண்ணினோம். கழுத.. கழுத.. அத வந்து நாசமாக்கி விட்டது.." என்று சுள்ளேனத் தாக்கும் அம்புகளாக ஒவ்வொரு வார்த்தையையும் வெளியிட்ட அவள் வெடுக்கென வெளியேறினாள்.


           தாயின் அடிகளையும் சொல்லம்புகளையும் தாங்க முடியாமல் துவண்ட குழந்தை தன் ஒவ்வொரு துளிக் கண்ணீரையும் கரடி பொம்மையின் மடியில் விட்டுக் கொண்டிருந்தது. தனது ஒவ்வொரு சோகத்தையும் அதனிடம் ஒவ்வொன்றாக ஒப்புவித்துக் கொண்டிருந்தது. 


           இவ்வாறாக தன் ஆசைகளை, எண்ணங்களைக் கருத்துக்களை ஆகாஷ் தன் தாயிடம் சொல்வதும், அவள் அதனைத் தடுப்பதும், அவன் அதற்குப் பதிலாக வேறு ஏதாவது வேளையில் ஈடுபடுவதும், தாயிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதும், பின் தனது கரடி பொம்மையிடம் தன் துயரங்களைச் சொல்லி அழுவதுமாய்க் காலம் கடந்தது.


            நாட் செல்ல செல்ல ஆகாஷின் நடத்தையில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் இப்போது யாருடனும் கதைப்பதில்லை. தாயின் முகத்தைப் பார்ப்பதைக் கூட அவன் தவிர்த்துக் கொண்டான். ஆய கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தன் போக்கில் அமைதியாக இருப்பான் அவன். இப்போதெல்லாம் வீட்டில் ஆரவாரமே இல்லை. வீட்டில் எப்போதும் மயான அமைதியே நிலவியது. 


           அன்று விடுமுறை தினம். ஆர்த்தியும் சூர்யாவும் வீட்டிலே இருந்தார்கள். அப்போது வீட்டின் அழைப்பு மணி அலறியது. கதவைத் திறந்தாள் ஆர்த்தி. அங்கே ஆகாஷின் வகுப்பாசிரியை நின்றிருந்தார். அவரை வரவேற்று உள்ளே அழைத்தாள் ஆர்த்தி. 


           "உங்களைச் சந்தித்து உங்க மகன் ஆகாஷப் பத்தி சொல்ல வேண்டும் என்று பல நாட்களாகவே நினைத்திருந்தேன். இப்போ தான் நேரம் கிடைத்து வந்தேன்." என்று அவள் கூறியதும், பதறிப் போன ஆர்த்தி,
 

           "டீச்சர்.. ஆகாஷ்.. எதாவது தப்பு செஞ்சிட்டானா..?" என்று பதறியபடியே கேட்டாள்.

           "அப்படியொன்றுமில்லை... கொஞ்ச காலமாக நானும் அவதானிச்சு வாறன். முன்பு போல படிப்புல ஆர்வம் காட்டமா.. எங்கயோ வெறிச்சுப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கிட்ட இருந்த பழைய துடிதுடிப்பு, குறுகுறுப்பு இப்போ ஒரு துளியும் அவனுக்கிட்ட இல்ல. வகுப்புல யார்ட்டையும் ஒட்டாம தனியா உட்கார்ந்திருப்பான். எதையோ பறிகொடுத்தது போல எப்பவும் ஒரே சிந்தனையோட இருப்பன். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியல.. மனசுல எதோ பெரிய கவலை இருக்குது போல.." என்று ஆசிரியை நிறுத்திய போது,


           "அவனுக்கு இங்க ஒரு குறையுமே இல்ல டீச்சர்.. உணவுக்கோ, உடைக்கோ, விளையாட்டு சாமனுக்கோ குறைவில்லா.. ஏன் இப்படி இவன்..?" என்று சிந்தனை வசப்பட்டாள்  ஆர்த்தி..
 

            டீச்சர் போய் விட்டார். டீச்சர் கூறிய விடயங்களை தன் கணவனிடம் கூறிய ஆர்த்தி, அவனையும் அழைத்துக் கொண்டு ஆகஷைத் தேடினாள்.


அங்கே ஆகாஷின் அறைக் கதவு சாத்தப் பட்டிருந்தது. அவன் தனது கரடி பொம்மையுடன் கதைத்துக் கொண்டு இருந்தான்.

           "இனிமே எனக்கு எல்லாமே நீ தான். எனக்கு யாருமே தேவை இல்ல. என் அம்மா, அப்பா, எல்லாமே நீ தான். இனி அப்படி தான் உன்னக் கூப்பிடப் போறேன். அம்மா.. அம்மா.. நான் உன் மடியில கொஞ்சம் சாயட்ட அம்மா.." என்று கூறியவன் பொம்மையின் மீது தலை வைத்து சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைக் கரடி பொம்மையின் கைகளால் துடைத்துக் கொண்டான். பின் எதை எதையோ அந்தக் கரடி பொம்மையிடம் கூறிக் கவலைப் பட்டுக் கொண்டான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனது பெற்றோர் உள்ளே ஓடி வந்தார்கள். 




           "ஆகாஷ் உனக்கென்ன பைத்தியமா..?" என்று கூறிய படி அந்தக் கரடி பொம்மையை அவன் கையில் இருந்து பிடுங்கி தூர எறிந்தாள் ஆர்த்தி.

           "அம்மா.. என் அம்மாவைத் தூக்கி வீசிட்டாங்க..." என்று கத்தியபடியே மயக்கமானான் ஆகாஷ். அவனைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு மனோதத்துவ வைத்தியரிடம் விரைந்தார்கள். 


           அவர்களின்  குடும்ப விபரங்களைத் தெரிந்து கொண்டார் டாக்டர். சில நிமிடங்களில் ஆகாஷ் மயக்கத்தில் இருந்து விடுபட்டு கண்களைத் திறந்தான். "என்ட கரடி அம்மா எங்க..?" என்றபடி மீண்டும் மயக்கமானான் அவன். டாக்டரின் பலத்த முயற்சியின் பின்னர் மீண்டும் அவன் கண் விழித்தான்.

           தனது பரிசோதனை அறைக்கு ஆகாஷை அழைத்துப் போன டாக்டர், ஹிப்னாடிஷம் செய்வதற்கு ஆயத்தமானார். அரைத் தூக்கத்தில் இருந்த ஆகாஷிடம் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினார் டாக்டர். அவனது பெற்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.

            "உன் பெயர் என்ன..?"

             "ஆகாஷ்.."

             "உங்க அம்மா அப்பா உங்களுடன் அன்பா இருக்காங்களா..?"

  
           "அவங்களுக்கு என் மேல அன்பெயில்ல.. அவங்க எண்ணக் கவனிக்குறதே இல்ல. நானா அப்பா முகத்தக் காண்றதே குறைவு.. அவங்க யாரும் என்னோட அன்ப பேசினதோ, அணைச்சு முத்தமிட்டதோ கிடையாது. நான் எதைச் சொன்னாலும் அவங்க அதைக் கேட்குறதே இல்ல. அவங்க என்ன மதிக்குறதே இல்ல. என்ட ஆசைகள விளங்கிக் கொள்றதும் இல்ல. யாரோடையும் என்ன விளையாட விடாம வீட்டுக்குள்ளயே அடச்சு வெச்சிருக்காங்க. எனக்கு அம்மா அப்பா எல்லாமே என் கரடி பொம்மை தான். என் பொம்மையைக் கொடுங்க.." என்று தேம்பி அழத் தொடங்கி 
விட்டான் ஆகாஷ்..

          பெற்றோரின் பக்கம் திரும்பினார் டாக்டர். "உங்க மகன் சொன்னத கேட்டிங்க தானே.. உங்க நடத்தைகளால அவன் மனம் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கு எண்டு விளங்குது தானே..?" டாக்டர் கேட்ட போது அவர்கள் பேச சக்தியற்று கண்ணீரோடு தலை குனிந்து நின்றிருந்தார்கள்.

            "வயிறு நிறையச் சப்படும், உடுப்பதற்கு விதம் விதமான ஆடைகளும், வீடு நிறைய விளையாட்டுச் சாமான்களும் கொடுத்து விட்டால் போதுமென்று நீங்க நினைத்தீங்க. ஆனா அது தவறு. இதை விட ஒரு பிள்ளை பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் தான் அதிகமா எதிர்பார்கிறது.." என்று விபாரித்தார் டாக்டர்.

             "நாங்க எந்தக் குறையுமே வைக்காம இருந்தாலும் எங்களையும் மீறி நாங்க அறியாமலே தவறு நடந்திருக்கிறது டாக்டர். " என்று கண்ணீரோடு உருகி நின்றால் ஆர்த்தி..

             "நாம குழந்தைகள அவங்க குழந்தைகள் தானே என்று அலட்சியமாக நடத்தாம அவங்கள மதிக்கணும். அவங்க பேச்ச, உணர்வுகள, கருத்துக்கள மதிக்கணும். அவங்க அபிப்ராயங்களுக்கு இடம் கொடுக்கணும். அவங்களா நான்கு சுவர்களுக்குள்ள அடச்சு வைக்காம பிள்ளைகளோட அவங்கள சுதந்திரமாக விளையாட விடனும். இப்படி நீங்க செஞ்சீங்கன்னா அவன பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும்..." டாக்டர் கூறி முடித்த போது,
 

            "நிச்சயமாக டாக்டர், நான் கொஞ்ச காலத்திற்கு லீவு போட்டுட்டு அவனோடே இருந்து அவன கவனிக்கப் போறேன்." என்று கூறியவாறு ஆகாஷிடம் போய்,

             "ஆகாஷ்.. மகனே.. என் செல்வமே..!" என்று கூறி அவனை நெஞ்சோடு சேர்த்து அவனை நெஞ்சோடு சேர்த்து அனைத்து முத்தமிட்டாள். சூர்யாவும் அவனை ஆரத் தழுவி கைகளில் தூக்கிக் கொண்டான். பின் அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

              இப்போது அந்தப் பூ முகத்தில் புன்னகையும் இனம் புரியாத மகிழ்ச்சியும் பளிச்சிட்டு நின்றது. இனி அந்தப் புன்னகை நிலைக்கப் போகின்றது.



 

(2006  ஆம் ஆண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற கதை..)

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

கனவுகளை சுமக்கும் அவள்....

அவள்...
வறுமையின் வயிற்றில்
தரித்தவள்..

அவளின் ஆசைகள்
நிச்சயமான ஆசைகள் அல்ல..
நிராசைகள் என்று
நிச்சயிக்கப்பட்ட ஆசைகள்...

அவள் விழிகளின்
ஓரம் கசியும் கண்ணீர்த்துளி -
ஓரங்கட்டப்பட்ட அவள்
எண்ணங்களின் எதிரொலி...

ஒவ்வொரு நாளும்
காலாவதியான ஒரு
கனவுடன் கண் விழிக்கிறாள்...

கனவுகளில் கூட
கருப்பு வெள்ளை தான்..
தினமும் அவள்
கனவுகள் சுமக்கிறாள் தான்..
அனால் கனவுகளுக்கு தான்
அவளை சுமக்க பிடிக்கவில்லை..

அடிக்கடி நடக்கும்
அவள் தோழிகளின்
ஆடம்பரக் கலந்துரையாடல்களில்
அவள் மௌனியாகிறாள்...

அவளின் வற்றிப் போன
வாழ்க்கைப் பாதையில்
வசந்தத்தின் சுவடுகள் - எப்போதும்
கானல் நீர் தான்...

-இன்ஷிராஹ் இக்பால்-

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

தொடரும் தண்டனைகள்...




உன்னைத் தண்டிக்க
நினைத்து நிறுத்தி வைத்தேன்
எனது தொலைபேசியை..
தண்டிக்கப் படுவது
நான் தான் என்று புரியாமல்..

உன்னுடன் கோவிக்கும்
ஒவ்வொரு முறையும்,
தண்டனை தந்து
இரட்டிப்பாக
வலியை அனுபவிப்பது
நான் தானே..

நான் ஆன் பண்ணி
அடுத்த நொடியே
நீ ஆப் பண்ணி
எனக்கு இன்னுமொரு
தண்டனை தந்தாய்..
இல்லையில்லை..
நமக்கொரு தண்டனை..

அன்று காத்திருந்தேன்
ஒரு  Vibrate alert இற்காக..
இன்று காத்திருக்கிறேன்
SMS delivery report இற்காக..
என் காதலுடன்
காத்திருப்புகளும்
தண்டனைகளும்
தொடர்கின்றன..

மன்னித்து விடு என்னை...

(
யாவும் கற்பனை.. )

செவ்வாய், ஜூன் 14, 2011

என் விடியல்கள்..!

நான்
என் விடியல்கள்
வியப்புக் குறிக்குள் தான்
விடியும்...
என் இராப் பொழுதுகள்
...இயக்கமற்றவை...
நித்திரை வேலை நிறுத்தம்..
தொலை தூரத்தில் தெரியும்
எதிர்காலத்தை நோட்டமிடும் போது மட்டும்
பார்வைப் புலம் பறிக்கப்படுகின்றது..
-இனியவள் இன்ஷிராஹ்-

கானல்நீர்க் கண்ணீர்....!!!

விரக்தியின் விளிம்பில்
நின்று நான் எழுதிய கவிதையை
வெற்றியின் சின்னம் என்று
எவ்வாறு சொல்ல...?
இது வேதனைகளின் வெளிப்பாடு..
கவிதை என்
கவலைகளுக்கு வடிகால்..
தனிமையில்
என் நிழலுக்கு துணை..
ஏமாற்றங்களுக்கு நான் கொடுக்கும்
தற்காலிக பிரியாவிடை..
என்
கானல்நீர்க் கண்ணீர்..!!!
தோல்விகளை மறக்க நான் எடுக்கும்
ஒரு பிரயத்தனம்..
ஏக்கங்களின் வரவுக்கு ஒரு
முட்டுக் கட்டை..
மூச்சுத் திணறும் வேளைகளில்,
எனக்கு செயற்கை சுவாசம்...
மன வேதனைகளுக்கு இது
வலி நிவாரணி..
மனதின் காயங்களுக்கு
இளம் சூட்டு ஒத்தடம்,,,
மொத்தத்தில்
சில நாளிகை மட்டும் உயிர் வாழும் என்
சின்ன சந்தோசம்..!!!!!!!

-இனியவள் இன்ஷிராஹ்-

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


என்னோட பிரெண்டுக்கு பிறந்த நாள்..
இன்னிக்கு இல்ல..
நாள் கடந்துடுச்சு..
நாட்பட்ட வாழ்த்து தான்..
ஆனா..
என் இதயத்தின்
வேர் தொட்ட வாழ்த்து..

புரிதல் இல்லாம
பிரிஞ்ச பிரென்ஷிப் இது..
இன்னும் நான் மிஸ் பண்றேன் தான்..
உறவை தானே
உன்னால் அறுக்க முடிஞ்சது..???
உண்டான நட்பின் சுவட்டை
என்ன செய்தாய்..???
தொடர்பை விட்டாய்..
தொங்கலாய் ஒதுங்கி கொண்ட
நினைவுகளை
என்ன செய்தாய்.??
முற்றாக மறக்க முடிந்தது உன்னால்..
முட்டுக் கட்டை போட முடியவில்லை
என்னால் உன் நினைவுக்கு..

கடந்த வருடம் உன் பிறந்த தினம் முழுக்க
என்னுடன் தானே கழித்தாய்..
நீயும் களித்தாய்
இன்று என்னை ஏன் தட்டிக் கழித்தாய்..??
உனக்கு நாள் கடந்து வாழ்த்துகிறேன்..
உன்னை மறந்ததால் இல்ல..
உன் உணர்வுகள் மரத்ததால்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இன்ஷிராஹ்விடமிருந்து..

சின்னத் துளிகள்..

வயிற்றுப் பசி..!

அடுப்பில் எரிய
வலி இல்லாததால் 
வயிற்றில் எரிகிறது நெருப்பு..!

இரைப்பைக்கு தெரியுமா
என் பணப்பை வெறுமை என்று..?

விலை வாசியின் வலை வீச்சில்
வளர்ந்தது என் வயிற்றுப் பசி..!

-இனியவள் இன்ஷிராஹ்-




திருமண சந்தை..!


சீதனம் என்னும் சாதனம்
விலை பேசப்படும் இங்கே..!
இதுவே
இல்லற வாழ்வின் நுழைவுச் சீட்டு..!
திருமண ஏக்கங்கள்
ஏலம் விடப்பட்டு,
பெண் உணர்வுகள்
பேரம் பேசப்பட்டு.. 
கன்னியரின் கற்பனைகள்
விற்பனை செய்யப் படும் 
விந்தையான சந்தை...!

இங்கே
விற்பவனே
விலையும் கொடுக்க வேண்டும்.. !

-இனியவள் இன்ஷிராஹ்-