வெள்ளி, ஜூன் 27, 2014

பருவம் முளைத்த காதல்..


பனித்துளி போல் ஒரு காதல்
பருவம் என் மேல் 
பட்டுத் தெறித்த போது
படர்ந்தது என்னை - அது ஒரு 
பக்குவமடையாத காதல் 

பாடசாலை நாட்கள்
காதல் என்னை 
நகர விடாமல் செய்த 
நாட்கள்

நீ என்னை 
கைது செய்து 
கட்டிப் போட்டிருந்த நாட்கள்..

எப்போதும் கூடவே இருக்க
தப்பாது போகும் வகுப்புக்கள்..

வகுப்பு முடிந்து 
வந்து கதைக்கக் கூட
வரையறையின்றி கதைகள் 
வசமிருந்தன அப்போது..

நீ வரும் வழி பார்த்து 
நீடித்திருந்த பாதைகள்
நீண்ட நேரம் ஒன்றாய் நடக்க
நீண்ட பாதை பார்த்து நடந்த பொழுதுகள்

மழையில் நனையவென்றே 
மறைத்து வைக்கும் குடை..

பாடவேளைகளில் நீ காட்டும் 
பாவனைகளும் பார்வைகளும் 
பசுமையாக இன்னும்

அடிக்கடி தழுவும் பார்வையில்
நழுவிப் போனது நாணம்
நகர்ந்து போனது வெட்கம்

அப்போதெல்லாம் 
நீ - இன்னொரு நான்
நான் - இன்னொரு நீ..

நான்
நீ 
நாம் காதல்
என்று 
வரையறுத்த ஒரு வட்டம்
அவ்வட்டம் விட்டு 
வந்து விட்டேனா..?
அங்கே நானும் இல்லை..
நீயும் இல்லை
நினைவுகள் மட்டும் நிரந்தரமாய்..

தொடர்பு அறுந்தது
தொங்கலாய் ஒதுங்கிக் கொண்டன 
தொடர்ந்து வந்த நினைவுகள் 

பள்ளியுடன் முற்றுப் பெற்றது 
பால்ய காலத்தில் 
பருவம் முளைத்த காதல்

சிறகு முளைத்த காலத்தில் 
சிறகு கட்டிப் பறந்தது - இன்று
சிறகுகளைக் கழற்றி விட்டு
சிதறிப் போனது - என் 
சிறு வயதுக் காதல்

நாமும் வாழ்க்கைப் பட்டோம் 
நீ உன் மனைவிக்கும் 
நான் என் கணவனுக்கும் 

முழுமை பெறாத காதல் தான்
ஆனால் 
முதல் காதல் அது..

காதல் அற்றுப் போனாலும் 
காலம் முற்றுப் போனாலும் 
கடந்து போகாது நினைவுகள் 
காரணம் அது முதல் காதல் - என் 
பருவம் முளைத்த காதல்..

-இன்சிராஹ் இக்பால்-